பதிவு செய்த நாள்
30
ஆக
2021
02:08
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.நாகை அடுத்த வேளாங்கண்ணியில் அமைந்து உள்ள கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஆக., 29ம் தேதி, ஆண்டுத் திருவிழா துவங்கி, செப்., 8 வரை நடப்பது வழக்கம்.திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின், மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் கோஷத் துடன் கொடியேற்றப்படும். கடந்த ஆண்டு போலவே, இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக, கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நேற்று மாலை 4:30 மணிக்கு, தேவாலய முகப்பில் இருந்து பக்தர்கள் இல்லாமல் கொடி பவனி புறப்பட்டு, தேவாலய வளாகத்தை சுற்றி வந்து, 5:00 மணிக்கு தேவாலய முகப்பை வந்தடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கனி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை, ஆன்லைன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.பக்தர்கள் வருகையை தடுக்க, போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களை, போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.