பதிவு செய்த நாள்
30
ஆக
2021
02:08
பல்லடம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 6 அடி உயரமுள்ள சிலைகள் தயாரிக்கும் பணி, பல்லடம் அருகே, மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வீடுகள் முன் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு, செப்., 20ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, ஆறு அடிக்கும் குறைவான உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்து வருகிறது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பாலாஜி கூறியதாவது: வழக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில், 700க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். கொரோனா பரவலால் கடந்த ஆண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, சிலை தயாரிப்பு பணி மந்தமானது. நடப்பு ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. சிலை பிரதிஷ்டை தொடர்பாக, அந்தந்த ஸ்டேஷன்களில் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு, ஆய்வு கூட்டத்தின் போது திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாய் தெரிவித்துள்ளார். அதன்படி, 6 அடி உயரமுள்ள, 400க்கும் அதிகமான சிலைகளை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான சிலைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.