பதிவு செய்த நாள்
31
ஆக
2021
09:08
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அன்னுார் பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர, கரிவரத ராஜப் பெருமாளுக்கு, காலை 10:30 மணிக்கு அபிஷேக பூஜையும், மதியம் 12:30 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது.பெருமாளுக்கு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. பளஞ்சிக குழு சார்பில், பஜனை நடந்தது. தாச பளஞ்சிக சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர், -சிறுமியர் பஜனை பாடல்களுக்கு நடனமாடினர்.* சிறுமுகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தியேட்டர் மேடு பஸ் ஸ்டாப்பில், 3 அடி உயரத்துக்கு கிருஷ்ணர் சிலை வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.* மேட்டுப்பாளையத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பஜனை கோவில் அருகே விழா கொண்டாடப்பட்டது. பல குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக பலர், தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு, கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தனர். இக்குழந்தைகளுக்கும், விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.* சூலுார் வட்டார பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில், கணபதி ஹோமத்துடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது.
சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் வைக்கப்பட்டு, உற்சவ விழா நடந்தது. ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கோகுலாஷ்டமி விழா, ரங்கதாதபுரம் வற்றியம்மன் கோவிலில் நடந்தது. கிருஷ்ணர் சிலை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து அசத்தினர். மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், கோகுலாஷ்டமியின் சிறப்பு குறித்து பேசினார். மண்டல தலைவர் கணேஷ், சந்திரன், கரியமால், உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* துடியலுார் அருகே பன்னீர்மடையில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் நடந்த விழாவில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அருள்மிகு கிருஷ்ணசுவாமி, பாமா, ருக்மணி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். -நிருபர் குழு-