பதிவு செய்த நாள்
02
செப்
2021
09:09
நாமக்கல்: மோகனுார் அருகே கோவில் புனரமைப்பு பணியின்போது, 1,000 ஆண்டு பழமையான பாண்டிய மன்னர் காலத்து நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே ஆரியூரில், 1,000 ஆண்டுக்கு முற்பட்ட மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. அருகேயுள்ள செல்லாண்டியம்மன் கோவில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர் அமைப்பதற்காக கோவில் முன்புறம் பள்ளம் தோண்டினர். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் பழமையான நந்தி சிலை சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, தோப்பூரைச் சேர்ந்த டாக்டர் சந்திரன் கூறியதாவது: பாண்டிய மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதால், பாண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. பாண்டிய மன்னர்களுக்கு பின், 500 ஆண்டுகளுக்கு முன், முகலாய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
குறிப்பாக மாலிக்காபூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்து கோவில்களையும், அதில் உள்ள சிலைகளையும் சேதப்படுத்தியதுடன், அவற்றை அழித்து அப்புறப்படுத்தி இருக்கலாம் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவில் வளாகத்தில், வெள்ளைக் கற்களால் ஆன விநாயகர் சிலையும், பெரிய நந்தி சிலையும் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. அவற்றை, ஆராய்ச்சிக்காக, சேலம் தொல்லியல் துறையினர் எடுத்து சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். தற்போது கிடைத்த இந்த சிலையும், சேதமடைந்து இருப்பதால், இதுவும் பாண்டீஸ்வரர் கோவில் சிலையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொல்லியல் துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்வதன் மூலம் கோவில் வரலாறு, எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவரும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.