பழநி: பழநியில் கடந்த 2019 டிச.,2 மலைக்கோயில் பாலாலயம் நடத்தப்பட்டு கும்பாபிஷேகப் பணிகள் துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது, "கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது என்பது ஆகம விதி. ஹிந்து அறநிலையத்துறை கீழ் உள்ள முக்கியமான கோயில்களில் ஆகம விதிகள் மீறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 2006 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்ஆட்சியில் பாலாலயம் செய்யப்பட்டு 26 நாட்களில் கும்பாபிஷேக பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. பாலாலயம் கடந்த 2019 டிசம்பரில் யாக பூஜையுடன் நடைபெற்றது. அதன்பின் ஆறு அல்லது ஒன்பது மாதங்களுக்குள் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது வரை கும்பாபிஷேக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடைய நிலையில் உள்ளது. தமிழக அரசும் ஹிந்து அறநிலையத் துறையும் பழநி மலைக் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த தயங்குகிறது. அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பழநி மலை கோயில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும் அப்படி நடந்திருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப் பெருமான் அரசாட்சிக்கு உதவி புரிவார். கும்பாபிஷேக தாமதத்தால் உலக நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசு விரைவில் கும்பாபிஷேகப் பணிகளை முடித்து பழநி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது என்றார்.