பதிவு செய்த நாள்
03
செப்
2021
12:09
மயிலாடுதுறை : சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில், சாஸ்த்ரா நிறுவனத்தால் காணிக்கையாக வழங்கப்பட்ட 5 கிலோ தங்கம் கொண்டு கொடிமரத்திற்கு தகடுகள் (ரேக்) பதித்திடும் பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யும் பணி இன்று காலை தொடங்கியது . இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் பங்கேற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம் சிறப்பு வாய்ந்த கும்பாபிஷேகம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் திருப்பணியை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் செய்திடும் வகையில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கினார். இந்த தங்ககட்டிகள் தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. முன்னதாக தாமரை வடிவான தங்க பத்ம பீடத்தின் கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க ரேக் மற்றும் தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அப்போது கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார் வரும் புதன்கிழமை எட்டாம் தேதி காலை தங்கக் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.