பதிவு செய்த நாள்
04
செப்
2021
07:09
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
மார்க்சிஸ்ட் கம்யூ., - சின்னதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், மங்களாக்கோவிலில் உள்ள சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த
வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய, மண்டல அளவில் தொல்லியல் துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநில அளவிலான தொல்லியல் துறை அனுமதி பெற்று, கூடிய விரைவில் திருப்பணிகள் துவக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
சின்னதுரை: இக்கோவில் 100 ஆண்டுகள் பழமையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை. நிறைய வருவாய் இருந்தும் ஏன் செய்யவில்லை?
அமைச்சர் சேகர்பாபு: துறை ஆய்வுக் கூட்டத்தின்போது 12 ஆண்டுகள்கடந்த கோவில்களில் திருப்பணி செய்ய, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.ஏற்கனவே திருப்
பணிக்கு எடுக்கப்பட்ட கோவில்களிலும் திருப்பணி செய்ய உத்தரவிட்டார்.கந்தர்வகோட்டை கோவில் நிலத்தில் இருந்து மாதம் 21 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. கோவில் நிதி இல்லாதபோதும், அரசு நிதியில் பணி மேற்கொள்ளப்படும்.
சின்னதுரை: கோவிலுக்கு 100 ஏக்கர் நிலம் உள்ளது. அதிலிருந்து ஆண்டுக்கு 21 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் வருகிறது என்றால், அந்த நிலங்களை குத்தகை சாகுபடிக்கு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க
வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நஞ்சை, புஞ்சை உள்ளது. விவசாய நிலங்கள் 5.81 ஏக்கர் மட்டுமே. இக்கோவில் இடங்களை யாரேனும் ஆக்கிரமித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - பெரியபுள்ளான் என்கிற செல்வம்: மதுரை மேலுார் தொகுதியில் உள்ள, பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?
அமைச்சர் சேகர்பாபு: நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., -உதயகுமார்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு பகுதி, தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர், அதை புதுப்பிக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்.அதற்குரிய கல், நாமக்கல் மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது, அமைச்சர்கள் ஆய்வு செய்து, பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக அறிந்தேன். எப்போது அந்தப் பணி முடியும்?
அமைச்சர் சேகர்பாபு: 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. தீ தணிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூன்று ஆண்டுகளில், ஒரு முறை கூட கூட்டப்படவில்லை. வீரராகவர் வாயிலை புதுப்பிக்க 19 கோடி ரூபாய் செலவில், கற்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் பங்களிப்புடன்இப்பணி நடக்கிறது. ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.