பதிவு செய்த நாள்
06
செப்
2021
02:09
பல்லடம்: தமிழக அரசின் இலவச மொட்டை அறிவிப்பு பயனற்றது என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. காணிக்கை இல்லாமல் மொட்டை அடிப்பது என்பது, பயனற்ற செயலாகும் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பக்தர்கள் பயன் அடைவதற்கு எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. அதை தவிர்த்து, கோவில்களின் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு பயனில்லாதது. நம் முன்னோர்கள் காலம் முதல், காது குத்துதல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளும் காணிக்கை வழங்கிய பின்பே நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உள்ள தமிழகத்தில், மொட்டை அடிக்க காணிக்கை இல்லை என்பதை ஏற்க இயலாது. யாரும் கேட்காவிட்டாலும், பக்தர்கள் இது போன்ற சடங்குகளுக்கு காணிக்கை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு மாற்றாக, அனைத்து கோவில்களிலும் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்து, இலவச தரிசனத்தை கொண்டு வர வேண்டும் என்றார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்தியுஞ்ஜய ஹோமத்தை நடத்திக் கொடுத்தார். தொடர்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.