பதிவு செய்த நாள்
08
செப்
2021
02:09
கோவை : விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை, இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டுமென, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். சத்குரு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது: உலகின் பல இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின்போது நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை, மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூல பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.
விநாயகர் சூழலுடன் மிகுந்த நட்புறவான கடவுள். எந்த மண்ணில் இருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்து போக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பானைகள் செய்வதை போல் சுடு மண்ணில் தயாரித்தாலும், அதை கரைக்க முடியாது. சிலையின் மீது செயற்கை வர்ணங்களை பூசினால், அது நீரை மாசுபடுத்தும். எனவே, நீரில் கரையும் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலையை தயாரித்து, இந்த விழாவை கொண்டாட வேண்டும். ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும், இதுவே சிறந்த வழி.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.