பதிவு செய்த நாள்
08
செப்
2021
01:09
மைசூரு : இம்முறை மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு, எட்டு யானைகளை அழைத்து வர, வனத்துறை அதிகாரிகள் தயாராகின்றனர்.
மைசூரு மண்டல, துணை வன பாதுகாப்பு அதிகாரி கரிகாலன் கூறியதாவது:கொரோனாவால் கடந்த முறை போன்று, இம்முறையும் மைசூரு தசரா எளிமையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 7 முதல் 15 வரை தசரா திருவிழா நடக்கும்.சாமுண்டி மலை, அரண்மனை வளாகத்தில் மட்டும், நிகழ்ச்சிகள் நடக்கும். எனவே, ஜம்பு சவாரிக்கு, யானைகளை தயாராக்குவது தாமதமாகிறது.கடந்தாண்டு ஜம்பு சவாரியில், வெறும் ஐந்து யானைகள் மட்டும் பங்கேற்றன. இம்முறை கூடுதலாக மூன்று யானைகள் அழைத்து வரப்படும்.யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்த பின், ஒத்திகை துவங்கும். மத்திகோடு முகாமின் அபிமன்யு, 55, கோபாலசாமி, 39, ஆனகோடு முகாமின் விக்ரம், 48, துபாரே முகாமின் காவேரி, 43, தனஞ்செயா, 38, நாகரஹொளேவின் தொட்டஹரவே முகாமின் அஸ்வத்தாமா, 34, பண்டிப்பூர் முகாமின் சைத்ரா, 50, லட்சுமி, 17, தசராவில் பங்கேற்கும்.தனஞ்செயா, கோபாலசாமி, சைத்ரா யானைகள், கடந்த முறை வரவில்லை.
அஸ்வத்தாமா முதன் முறையாக, தசராவில் பங்கேற்கிறது.தசராவில் பங்கேற்கும் யானைகளின் பட்டியல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம். பாகன்கள், உதவியாளர்கள் மட்டுமே தசராவில் பங்கேற்பர். அவர்களின் குடும்பத்தினருக்கு வாய்ப்பில்லை.செப்டம்பர் 13 சுப நாளாகும். அன்றைய தினம் தசரா யானைகள் அழைத்து வரப்பட வாய்ப்புள்ளது. அன்று காலை 11:00 மணிக்கு, ஹூன்சூரின் வீரனஹொசள்ளி கேட் அருகில், அபிமன்யு தலைமையிலான யானைகளுக்கு, சம்பிரதாயப்படி பூஜை செய்து, வன பவனுக்கு அழைத்து வரப்படும்.வரும் 16ல் வனத்துறை சார்பில் பூஜை செய்து, அதன்பின் அரண்மனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.