பதிவு செய்த நாள்
09
செப்
2021
08:09
சென்னை: கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தமிழகம் முழுமையாக கடைப்பிடிக்கிறது. எனவே,வீட்டில் இருந்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள், என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, நவீன, ரோவர் உபகரணங்களை கொண்டு துல்லியமாக அள விடும் பணியை ஹிந்து சமய அறநிலையத்துறை துவக்கி உள்ளது.
4.78 லட்சம் ஏக்கர்: சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், இப்பணியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழகம் முழுதும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, 4.78 லட்சம் ஏக்கர் நிலம் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றை நவீன, ரோவர் உபகரணங்கள் கொண்டு துல்லியமாக அளவிடப்படுகின்றன. இதன் வாயிலாக எளிய முறையில் வரைபடங்கள் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்புகள், காணாமல் போன புல எல்லைக் கற்களை எளிதில் கண்டறியலாம். இதற்காக வருவாய் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன, ரோவர் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 61.99 ஏக்கர் நிலம் அளவிடப்பட உள்ளது.
50 உபகரணங்கள்: ஓராண்டு காலத்திற்குள் அனைத்து கோவில் நிலங்களும் அளவிடப்படும். கூடுதலாக, 50 உபகரணங்களை வருவாய் துறையிடம் கேட்டுஉள்ளோம். பிரதமர் மோடி, விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட சொல்லி இருக்கிறார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தமிழகம் முழுமையாக கடைப்பிடிக்கிறது. எனவே, வீட்டில் இருந்த படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைக் கமிஷனர் காவேரி செய்திருந்தார்.