பதிவு செய்த நாள்
09
செப்
2021
03:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் விற்பனை செய்யப்படும் ஆறு வகை பிரசாதங்களில், தற்போது புளியோதரை மட்டுமே விற்பனை செய்வதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபடுகின்றனர்.பின், மலைக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாத விற்பனை நிலையத்தில் விற்கப்படும் லட்டு, தேன்குழல், மிளகுவடை, அதிரசம், சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை ஆகிய பக்தர்கள் வாங்கிச் செல்வர்.இதன் மூலம், கோவில் நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று, இரண்டாம் அலையில் மூடப்பட்டிருந்த கோவில் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் திறக்கபட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், பிரசாத விற்பனை நிலையத்தில் புளியோதரை மட்டுமே விற்பனை செய்கின்றனர். மீதமுள்ள, ஐந்து வகையான பிரசாதங்கள் இது வரை விற்பனை செய்யப்படாததால், பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.திருத்தணி கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், பிரசாதங்கள் தயார் செய்வதற்கு ஒப்பந்ததாரர் ஒருவரை நியமித்து, அதன் மூலம் மேற்கண்ட பிரசாதங்கள் வாங்கி விற்பனை செய்து வந்தோம். ஒப்பந்ததாரருக்கு கூலி ஆட்கள் கிடைக்காததால், தற்காலிக ஐந்து பிரசாதங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் வழக்கம் போல் அனைத்து பிரசாதங்களும் விற்பனை செய்யப்படும் என்றார்.