பதிவு செய்த நாள்
10
செப்
2021
10:09
மைசூரு, : மைசூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தசரா என்றால் மொத்த நகரமும் திருவிழா கோலம் பூணும். பொது மக்களின் வீடுகள் முதல், அரண்மனை வரை, அனைத்து இடங்களும் களை கட்டும். ஆனால் இந்த கொண்டாட்டங்களை கொரோனா காலி செய்து விட்டது.
மைசூரு தசராவுக்கு, பல நுாற்றாண்டு வரலாறு சிறப்புள்ளது. தசராவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, மைசூரு களை கட்டும். உள்நாடு, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர், மைசூரில் விடுதிகள், லாட்ஜ், நட்சத்திர ஓட்டல்களில், அறைகள் முன் பதிவு செய்வர். திருவிழா துவங்க ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன், மைசூருக்கு வருவர். ஒரு பக்கம் அரசு, தசராவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்.
மற்றொரு பக்கம், பல்வேறு அமைப்புகள், சங்கங்களும் தனிப்பட்ட முறையில், கலை, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி, தசராவை மேலும் மெருகேற்றுவர். பொருட்காட்சி, உணவு மேளா என, ஒன்பது நாட்களும் மைசூரு முழுவதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஜம்பு சவாரியில், யானைகள் கம்பீரமாக நடை போடுவதை பார்ப்பதற்காகவே, கூட்டம் அலை மோதும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று, தசரா திருவிழாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. முந்தைய ஆண்டு எளிமையாக தசரா கொண்டாடப்பட்டது. அரண்மனை வளாகத்தில் மட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. ஜம்பு சவாரியும் கூட, அரண்மனை வளாகத்தில் நடந்து முடிந்தது. இம்முறையும் கூட, எளிமையாக தசரா திருவிழா கொண்டாட, அரசு முடிவு செய்துள்ளது. இது மைசூரு மக்களுக்கு வருத்தமளித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கும், கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் மைசூரு தசரா வந்துவிட்டால், இங்குள்ள சுற்றுலா தலங்கள், சுற்றுலா பயணியரால் நிரம்பி வழியும். தொலைவிலிருந்து வரும் சுற்றுலா பயணியரை நம்பி, மைசூரின் பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்தினர். முன் போன்று சுற்றுலா பயணியர் வருகை குறைந்ததால், இம்மக்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். தசரா என்றால் நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடக்கும். அனைத்து விதமான வியாபாரம் செய்வோருக்கு, உதவியாக இருந்தது. இப்போது வியாபாரமும் இல்லை. கடைகள், ஓட்டல், லாட்ஜ் என பலரும் நஷ்டமடைந்துள்ளனர். கொரோனா குறைய வேண்டும், பழையபடி தசரா விமரிசையாக நடத்த வேண்டும் என, மைசூரு மக்கள் சாமுண்டீஸ்வரியை, தினமும் பிரார்த்தனை செய்கின்றனர்.