பதிவு செய்த நாள்
10
செப்
2021
10:09
புஷ்கரம் விழா என்பது நதிகளை போற்றி வணங்கும் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது, அந்த ராசிக்குரிய நதிகளில் இந்த விழா நடத்தப்படுகிறது.
பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரனான குரு பகவான், குரு பெயர்ச்சி சமயங்களில், அந்தந்த ராசிக்குரிய தீர்த்தங்களில் 12 நாட்கள் வசிப்பதாக ஐதீகம். இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் மும்மூர்த்திகள், தேவர்கள், ரிஷிகள், அந்தந்த தீர்த்தங்களுக்கு வந்து நீராடுவதாக நம்பப்படுகிறது.அதன்படி, நாட்டில் உள்ள 12 புனித நதிக் கரைகளில் இருக்கும் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
வரும் நவ., 20ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. இதில், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு இடம் பெயர்கிறார். அந்த கும்ப ராசிக்கு உரிய நதியாக பீமா நதி கருதப்படுகிறது.எனவே, குரு பகவான் வாசம் செய்யும் சந்திரபாகா நதி எனப்படும் பீமா நதியில், நவ., 21 முதல், டிசம்பர் 2 வரை 12 நாட்கள், ஆதி புஷ்கரம் எனும் விழா கொண்டாடப்பட உள்ளது.
பீமா நதி: மஹாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள பீமாஷங்கர் மலைத் தொடர்களில் இருந்து, பீமா நதி உற்பத்தியாகிறது. கர்நாடகா, தெலுங்கானா வழியாக, கிருஷ்ணா நதியுடன் சங்கமிக்கிறது. ஷோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் கோவில் உட்பட ஏராளமான கோவில்கள், பீமா நதிக் கரையில் அமைந்துள்ளன. அங்கு பிறை சந்திரன் வடிவில், இந்த நதி செல்வதால், சந்திரபாகா எனவும் போற்றப்படுகிறது.
புகழ்பெற்ற பண்டரிபுரம், சந்திரபாகா நதிக்கரையில் இந்த ஆண்டு புஷ்கரம் விழா நடத்தப் பட உள்ளது. உடுப்பி பலிமரு மட பீடாதிபதி வித்யாதீஷ தீர்தரு சுவாமி, பெஜாவரா மட பீடாதிபதி விஸ்வபிரசன்ன தீர்தரு சுவாமி ஆகியோர் புஷ்கர விழாவை கொடியேற்றி துவக்கி வைக்கின்றனர்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, மகாலட்சுமி சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், விழாக் குழுவின் முதன்மை அமைப்பாளர்களான மகாலட்சுமி சுப்பிரமணியம், வி.சி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
5 ஆண்டுகளில் புஷ்கர விழா!ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 2015ம் ஆண்டும், அடுத்த ஆண்டு கிருஷ்ணா நதியிலும் புஷ்கர விழா, காஞ்சி சங்கராச்சாரியார்கள் முன்னிலையில் நடந்தது. 2017ம் ஆண்டு காவிரி நதியிலும், அடுத்த ஆண்டு தாமிரபரணி நதி, நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையிலும், திருப்புடை மருதுாரிலும் புஷ்கரம் சிறப்பாக நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பிரம்மபுத்ரா நதியில் கொண்டாடப் பட்டது. கடந்த ஆண்டு, கர்நாடகா ஹம்பி, ஆனேகுந்தி, துங்கபத்ரா நதிக்கரையில் புஷ்கரம் விழா விமரிசையாக நடத்தப்பட்டது.
- நமது நிருபர்- -