பதிவு செய்த நாள்
10
செப்
2021
03:09
மங்களூரு : கொரோனா அதிகரிக்கும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தட்சிண கன்னடாவில், தொற்று கட்டுக்குள் வராததால், இம்மாவட்டத்தில் விதிமுறைகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தட்சிண கன்னடாவில் கொரோனா தொற்று அதிகரிக்க, கேரளாவிலிருந்து வருவோரே காரணம்.எனவே, இம்மாநிலத்திலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்த தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.இம்மாவட்டத்தில், பல்வேறு முக்கியமான புண்ணிய தலங்கள், கோவில்கள் உள்ளது. இங்கு மாநிலம், வெளி மாநிலங்களிலிருந்து, பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களுக்காக மாவட்ட நிர்வாகம், புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தட்சிண கன்னடாவின் முக்கிய கோவில்கள் குக்கே சுப்ரமண்யா, கட்டீலு துர்கா பரமேஸ்வரி, தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோவில்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும்.இக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, கடவுளை தரிசிக்க வாய்ப்பளிக்கப்படும்.முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி, கடவுள் தரிசனம், தீர்த்த பிரசாதம், அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். அடுத்த உத்தரவு வரும் வரை மற்ற சேவைகளுக்கு அனுமதியில்லை.
கோவில்களில் உள்ள, தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்க வாய்ப்பில்லை. வார இறுதி நாட்கள் சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்களுக்கு, கடவுளை தரிசிக்க அனுமதியில்லை. அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி, பூஜை செய்வர். கோவில்களில் உற்சவம், ஊர்வலம், திருவிழாக்கள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில், நிபா தொற்று பீதியும் உள்ளது. எனவே, தட்சிண கன்னட எல்லைப்பகுதியில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட அரசு வாய்ப்பளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.