சிக்கபல்லாப்பூர் : சிக்கபல்லாப்பூர் கோடிலிங்கேஸ்வரா மலை அடிவாரத்தில், 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த ஹொய்சாலர் காலத்து கன்னட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் நகரகெரி அருகில் கோடிலிங்கேஸ்வரா மலை அமைந்துள்ளது.மலை அடிவாரத்தில் ஜோகேனஹள்ளி வனப்பகுதியில், பழங்கால கல்வெட்டு ஒன்று விவசாயிகளுக்கு தென்பட்டது. அவர்கள் சமூக ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.இதையறிந்த இந்திய தொல்லியியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், அந்த இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். 6 உயரம்; 1.5 அடி அகலம் கொண்ட அந்த கல்வெட்டில் கன்னட மொழியில் செதுக்கப்பட்டுள்ளது.பழைய கன்னடத்தில், 34 வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை ஹொய்சாலர் காலத்தில், 1249ல் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.தகவலறிந்த அப்பகுதியினர் பலரும் கல்வெட்டை பார்க்க, ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.