புதுச்சேரி மணக்குள விநாயகர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2021 06:09
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது.
மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 5 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். உடல்வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின் அனுமதிக்கப்பட்டனர்.இரவு 9 மணி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசன சேவை மட்டுமே நடந்தது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு யானை லட்சுமி ஆசி வழங்கியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.