பதிவு செய்த நாள்
13
செப்
2021
06:09
பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 48 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகை ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.
பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொரோனாவால் அரசின் வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டது. இதன்படி பரமக்குடி ஈஸ்வரன் கோயில் தெரு, கொட்டாப்புளி தெரு, கிருஷ்ணா தியேட்டர், பங்களா ரோடு, உலகநாதபுரம், எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் தெரு, ஆர்.எஸ்.எஸ்., காரியாலயம், மலையான் குடியிருப்பு உள்ளிட்ட 48 இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து தரிசனம் செய்தனர்.
அப்போது திருவிளக்கு பூஜை, சிலம்பாட்டம், கும்மியடித்தல், முளைப்பாரி மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணி முதல் பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் விஜர்சனம் செய்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. விழாவில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதித்தன், செயலாளர் சிவக்குமார், நகர் தலைவர் குமரன், திருமுருகன், தாமோதரன், கார்த்திக், குமார், ஜெகன், மாரி, புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பரமக்குடி டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.