பதிவு செய்த நாள்
14
செப்
2021
12:09
பெ.நா.பாளையம்: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலமலை ரங்கநாதர் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் இம்மாதம், 18ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை, ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
ஒவ்வொரு கோவில்களிலும், அதிகாலை விஸ்வரூபம், தொடர்ந்து, சாற்றுமுறை, நடைத்திறப்பு, மங்கள ஆரத்தி, உற்சவர் புறப்பாடு இரவு சைன பூஜையுடன் விழா நிறைவடையும். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், தற்போது, தொற்று காலம் என்பதால், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமான பூஜைகள் நடக்கும் என்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது தொற்று பரவல் விகிதம் குறைந்து வருவதால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும், பல்வேறு நிபந்தனைகளுடன், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.