பதிவு செய்த நாள்
14
செப்
2021
03:09
திருப்பூர்: ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூரில், 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஆண்டிபாளையம் வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, சந்திராபுரம் பிரிவில் தனியார் இடத்தில், 10 அடி உயரம் கொண்ட விநாயகர் உட்பட, 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டனமூன்று நாட்களாக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக அரசு விசர்ஜன ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிந்து முன்னணியினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல இருந்தனர்.இதையறிந்த போலீசார் நேற்று முன்தினம் இரவில் இருந்து ஹிந்து முன்னணி நிர்வாகிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிறப்பு பூஜைகள் முடிந்த பின், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு வாகனங்களில் சிலைகள் ஏற்றப்பட்டது.
சிலைகள் இருந்த வாகனம் மற்றும் நிர்வாகிகள் வாகனங்களை தவிர, தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.திருப்பூர் - தாராபுரம் ரோடு ஆண்டிபாளையம் பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில், ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் வழங்கிய சிலைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. தீயணைப்பு துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.