சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த சேக்கிழார் விருது வழங்கும் விழாவில் ஓதுவார்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிதம்பரம் ஞானப்பிரகாசம் வடக்குத் தெரு சேக்கிழார் மண்டபத்தில் சேக்கிழார் விழா, தர்மபுரம் ஞானப்பிரகாச ஓதுவார் நிறுவிய ஆவணி மூல விழா மற்றும் தங்க சிவராமன் அறக்கட்டளை சார்பில் நம்பியாண்டார் நம்பி குரு பூஜை விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. சேக்கிழார் விழா அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு பிள்ளை தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலர் டாக்டர் அருள்மொழிசெல்வன் முன்னிலை வகித்தார்.
பாலசுப்பிரமணியம் ஓதுவாருக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் பொற்கிழி வழங்கப்பட்டது. முனைவர் பனசை மூர்த்தி ‘திருவாசகத் தேன் துளி’ என்ற தலைப்பிலும், ராகவன், நம்பியாண்டார் நம்பி குறித்து ‘வாக்கும் வாழ்வும்’ என்ற தலைப்பிலும், ‘சேக்கிழார் உணர்த்தும் வாழ்வாதாரம்’ என்ற தலைப்பில் முனைவர் சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மானத்தங்குடி இராம சோமசுந்தர சிவாச்சாரியார் மற்றும் சுசீந்திரம் தம்பையா ஓதுவார் ஆகியோருக்கு சேக்கிழார் விருது பாராட்டுப் பத்திரம் மற்றும் பொற்கிழி வழங்கப்பட்டது. சேக்கிழார் விருது பெற்றவர்களை கேதார்நாத் தீக்ஷதர் பாராட்டி பேசினார். சேக்கிழார் விழா அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் முத்துக்குமரனின் 50 ஆண்டு மருத்துவ சேவையை பாராட்டி கயிலைச்செல்வன் ராமநாதன் கவுரப்படுத்தினார். விழாவில் டாக்டர் முருகேசன், டாக்டர் ரமேஷ் , ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் கேதாரநாதன் , டாக்டர் கபாலிமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார்.