பதிவு செய்த நாள்
15
செப்
2021
04:09
பெங்களூரு: பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மாநிலம் முழுதும் முறைகேடாக கட்டியுள்ள வழிபாட்டு தலங்களை இடிக்கக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என, 2009ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடிப்படையாக வைத்து, மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் உச்சகனியில் உள்ள புராதன மஹாதேவம்மா கோவில் கடந்த வாரம் இடிக்கப்பட்டது. மேலும் 90 கோவில்கள் இடிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.எதிர்ப்புஇதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வினரும் வழிபாட்டு தலங்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து வருவாய் துறை அமைச்சர் அசோக், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அதே நேரம், மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அந்த வகையில், திடீரென வழிபாட்டு தலங்களை இடிக்க வேண்டாம் என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து, மக்களின் உணர்வை மதிப்பளித்து தான் முடிவு எடுக்கப்படும். அரசு உத்தரவு வரும் வரை வழிபாட்டு தலங்களை இடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பெங்களூரு நகரம் - 77, பெலகாவி - 148, பல்லாரி - 33, மாண்டியா - 13, பீதர் - 138, விஜயபுரா - 141, சாம்ராஜ்நகர் - 18, சிக்கபல்லாபூர் - 180.சிக்கமகளூரு - 3, சித்ரதுர்கா - 66, தட்சிண கன்னடா - 833, தாவணகரே - 15, கொப்பால் - 17, தார்வாட் - 221, கதக் - 16, கலபுரகி - 136.ஹாவேரி - 33, குடகு - 2, ராம்நகர் - 3, ராய்ச்சூர் - 59 உட்பட மாநிலம் முழுதும், 1,269 வழிபாட்டு தலங்களை இடிப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.பக்தர்கள் நிம்மதிமைசூரில் புராதன கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, அறிக்கை கேட்டு கலெக்டர் பகாதி கவுதம், ஹுன்சூர் தாசில்தார் ஆகியோருக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அசோக்கின் உத்தரவை அடுத்து, மாநிலம் முழுதும் முறைகேடாக கட்டியுள்ள வழிபாட்டு தலங்களை இடிக்கும் பணி அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஹிந்து கலாசாரத்தை பாதுகாப்போம் என்று பேசும் பா.ஜ.,வினர், கோவில்களை இடிக்க உத்தரவிட்டது சரியில்லை. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி, சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.எச்.டி.ரேவண்ணா,எம்.எல்.ஏ., - ம.ஜ.த.,மைசூரில் கோவிலை திடீரென இடித்தது துரதிருஷ்டவசமானது. முதல்வர் பசவராஜ் பொம்மை, மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் போது எச்சரிக்கை விடுப்பது அவசியம். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.சி.டி.ரவி,எம்.எல்.ஏ., - பா.ஜ.,