பதிவு செய்த நாள்
20
செப்
2021
04:09
சென்னை: ஹிந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவதும்; ஆச்சாரியார்கள், மடாதிபதிகள் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஆஷாட பவுர்ணமி; வியாச பவுர்ணமி என்று அழைக்கப்படும், ஆடி மாத பவுர்ணமி முதல் கார்த்திகை மாத பவுர்ணமி வரையிலான காலம், தேவர்களும், பகவான் விஷ்ணுவும் யோகநித்திரையில் இருக்கும் காலம். இந்தக் காலகட்டத்தில் செய்யும் இறைவழிபாடு மிகவும் பலன் தரக்கூடியது.அந்த நான்கு மாதங்கள் மழைக்காலம். அக்கால கட்டங்களில் பல்வேறு ஜீவராசிகளும் இடம் பெயர்ந்து வாழும். அவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல், ரிஷிகள், சன்யாசிகள், ஆச்சாரியார்கள், ஆஷாட பவுர்ணமி அன்று வியாச பூஜை செய்து, அந்நாள் முதல் ஒரே இடத்தில் தங்கியிருப்பர்.சாதுர்மாஸ்ய விரத காலகட்டத்தில் அவர்கள் பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவர். அவை, உலகம் முழுமைக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியவை. குறிப்பிட்ட நான்கு மாதமும், சில கட்டுப்பாடுகளோடு விரத முறையையும் அனுஷ்டிப்பர். இதற்கு சாதுர்மாஸ்ய விரதம் என்று பெயர்.முன்னர் நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது, காலப்போக்கில், பக்ஷம் என கணக்கிட்டு, நான்கு, பக்ஷம் அதாவது, 60 நாட்கள் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு கடைப்பிடிக்கப்பட்ட சாதுர்மாஸ்ய விரதம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.இதையொட்டி, காஞ்சிபுரம் ஓரிக்கை மகாசுவாமி மண்டபத்தில், இன்று காலை முதல் மூன்று கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. மாலை, 5:00 மணிக்கு மகாசுவாமிகள் மண்டபத்தில் இருந்து, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், விஸ்வரூப யாத்திரையாக புறப்பட்டு, செவிலிமேடு எனப்படும் சிவலிங்க மேடு பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலை அடைகிறார்.அங்கு பகவத்கீதையின், 11வது அத்தியாயமான விஸ்வரூப அத்தியாயத்தை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும், விசேஷ பூஜைகளும் நடக்க உள்ளன.