பதிவு செய்த நாள்
22
செப்
2021
12:09
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே மண்ணில் புதைந்த நிலையில் ராணிமங்கம்மாள் சிலை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் கல்வெட்டுக்களுடன் நடுகல், குதிரையில் செல்லும் அரசரின் சிலைகள் உள்ளன.
மதுரையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய வணிகப்பாதைகளில் ஒன்றாக உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் மலைக்கண்வாய் மலைப்பகுதி இருந்துள்ளது. வணிகப்பாதையை ஒருவழிப்பாதையாக்கி கண்காணிப்பதற்காக வடக்கு, தெற்கு மலைப்பகுதிக்குட்பட்ட சுமார் ஒன்றரை கி.மீ., நீளத்திற்கு கற்கோட்டை அமைத்து கண்காணித்துள்ளனர். நுழைவுப்பாதையை வாடிவாசல் அமைத்து அருகில் வாடிகருப்பு கோயிலும் உள்ளது.
நாயக்கர் ஆட்சியில் ராணிமங்கம்மாள் இப்பாதையை சீர்படுத்தியுள்ளார். மங்கம்மாள் சாலை என தற்போதும் பேச்சு வழக்கில் கூறி வருகின்றனர்.இப்பகுதியில் இடையபட்டி அருகே மாலைக்கோயில் உள்ளது. இதன் மேற்கே உள்ள நிலத்தில் இரண்டடி உயரம் உள்ள வேட்டைச் சமூகத்தை சார்ந்த தலைவன் தலைவியுடைய நடுகல் உள்ளது. மாலைக்கோயிலில் அரசன் குதிரையில் செல்வது போலவும், அவரது துணைவியார் அருகிலும், குடை பிடித்தபடி ஒருவரும், முன்னாலும், பின்னாலும் பாதுகாவலர்களுடன் செல்வது போன்ற நடுகல்லும் உள்ளது.
அருகில் புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. மாலைக்கோயிலுக்கு கிழக்கே மண்ணில் புதைந்த நிலையில் பெண் ஒருவர் கும்பிடுவது போன்ற சிலையை வெளியே எடுத்துப்பார்த்த போது, ராணி மங்கம்மாளின் தோற்றத்துடன் உள்ளது.தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: மூன்று நடுகல் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. கல்வெட்டுடன் கூடிய நடுகல்லில் இப்பகுதியின் பூர்வகுடியாக இருந்த மூப்பர் சமூக தலைவர் சிற்பம் உள்ளது.
இடதுகையில் வில்லும், வலதுகை அம்பை எடுப்பது போலவும், அருகில் அவரது மனைவியின் சிற்பமும் உள்ளது.சிலை மீதுமான், பன்றி உருவங்கள் செதுக்கியுள்ளனர். நடுகல்லின் தென்புறத்தில் அடைக்கலங்காத தானப்பன் மகன் பெரிய அடைக்க முப்பன் மருவி என கல்வெட்டு உள்ளது. அருகில் மண்ணில் புதைந்தபடி உள்ள பெண் சிற்பம் ராணிமங்கம்மாளின் தோற்றத்தை ஒத்துள்ளது. அவரது தலையில் உள்ள கொண்டை, ஆடை, அணிகலன்கள், கும்பிட்ட வாறு உள்ள தோற்றம் ராணிமங்கம்மளுடைய சிலை என உறுதியாக கூறலாம் என்றார்.