பதிவு செய்த நாள்
22
செப்
2021
12:09
சனிக்கிழமை தினங்களில், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புரட்டாசி மாதத்தின் இதர நாட்களில், பெருமாள் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.கொரோனா பரவல் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது. இதனால், பெருமாள் கோவில்களில் நேற்று முன்தினமும், நேற்றும், பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகை தந்தனர்.
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையத்தில், வெங்கடேச பெருமாள் கோவில், உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், பவுர்ணமி தினத்தையொட்டி, வெங்கடேச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னுார்: மொண்டிபாளையம் கோவிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமை கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். சனிக்கிழமை தடையால், கடந்த இரு நாட்களாக, பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று, வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திங்கள் முதல் வியாழன் வரை, காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:30 மணி வரையும் கோவில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றனர் -நமது நிருபர் குழு-.