பதிவு செய்த நாள்
22
செப்
2021
12:09
சென்னை :ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் பிரம்மாண்ட சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திரிதண்டி ஜீயர் அழைப்பு விடுத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் வைஷ்ண குரு ராமானுஜர். நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று சமத்துவத்தை பரப்பியவர்.
பணிகள் துவங்கின: ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சி புரம் கோவில்களுக்கு சென்று, பூஜை நடைமுறைகளை வழிநடத்தி செயல்படுத்தியவர்.அவரின், 1,000மாவது ஜெயந்தியை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், அவருக்கு 216 அடி உயர சிலை நிறுவ திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.அதன்படி, திரி தண்டி சின்னஜீயர் தலைமையில், அவரின் ஆசிரமத்தில், 40 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் செலவில், ராமானுஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை சீனாவில் தயாராகி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு நிறுவப்பட்டுள்ளது. சிலையின் கீழ் பகுதி கர்ப்பக் கிரஹத்தில், 108 கிலோ எடையுள்ள ராமானுஜர் தங்க விக்ரஹம் நிறுவப்படுகிறது.
ராமானுஜர் சிலை திறப்பு விழா அடுத்த ஆண்டு பிப்., 2 முதல் 14ம் தேதி வரை விமரிசையாக நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி, தேசிய தலைவர்களை சந்தித்து திரிதண்டி சின்னஜீயர் அழைத்து விடுத்து வருகிறார்.அதன்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.சிலை திறப்பு விழாவின் பிரதான நாளான, பிப்., 5ல் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
உறுதி: இந்நிலையில், சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்த திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள், ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். முதல்வரும், கண்டிப்பாக வருகிறேன் என ஜீயரிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.சந்திப்பின் போது, தமிழக திருக்கோவில்களில் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்; ராமானுஜர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், சின்ன ஜீயர், முதல்வரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.