கோவில் நிலங்கள் அளவீடு: வரைபட தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2021 12:09
சென்னை: தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ரோவர் கருவி வாயிலாக அளந்து, வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அறநிலையத் துறை கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை ரோவர் கருவியால் அளவிடும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் வாயிலாக எளிய முறையில் துல்லியமாக அளந்து, வரைபடங்கள் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல் போன புல எல்லை கற்களை கண்டறியலாம்.இதற்காக வருவாய்த் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன ரோவர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 61.99 ஏக்கர் நிலம் அளவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு, நில அளவை செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 200 நில அளவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏராளமான கோவில்களில் அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு, அது தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக, கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்படும் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.