திருப்பதிக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2021 04:09
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.
கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்.,20 முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. மேலும், இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதேபோல், அடுத்த மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை (செப்.,23) காலை, 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, ‛திருப்பதிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். இல்லையேல் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கோவிட் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வழங்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.