பதிவு செய்த நாள்
23
செப்
2021
04:09
திருச்சூர்: கேரளாவில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள, நாட்டின் மிகப் பழமையான மசூதி, பொது மக்களுக்காக, விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில், செரமான் ஜும்மா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மற்றும் மிகப் பழமையான மசூதியாக கருதப்படும் இது, கி.பி., 629ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள இந்த பழமையான மசூதி, விரைவில் பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்பட உள்ளது. இது குறித்து மூத்த அரசு அதிகாரி நவுஷித் கூறியதாவது:மாநில அரசு திட்டத்தின்கீழ், 1.14 கோடி ரூபாய் செலவில், செரமான் ஜும்மா மஸ்ஜித் மசூதி புனரமைக்கப்பட்டுள்ளது. மசூதியின் அசல் தன்மையும் அதன் அழகையும் சீர்குலைக்காமல் இந்த புனரமைப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த மசூதியின் வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில், இஸ்லாமிய பாரம்பரிய அருங்காட்சியகம் ஒன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த புனரமைப்புப் பணிகள் முடிக்கப் பட்டு உள்ளதற்கான கடிதம், மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக, இந்த மசூதியை, முதல்வர் பினராயி விஜயன் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.