பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012
11:06
வடமதுரை: எரியோடு குரும்பபட்டியில் பழமையான ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நாயக்கர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் வல்லகொண்ட நாயக்க மன்னர் முக்கிய விஷயங்களுக்கு முன்பு இக்கோயிலில் வழிப்பட்டதாகவும், திருமணம் தடை உள்ளவர்கள், இக்கோயில் கல்யாண உற்சவம் செய்து வைத்த பின் திருமணம் கைகூடியதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். எரியோடு தொழிலதிபர் பி.முருகேசன்- அம்சவள்ளி மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள், ஸ்ரீ தும்பிக்கையாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என தனித்தனி சன்னதிகள் கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களின் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 29 காலை 9.30 மணிக்கு மேல் 10.25க்குள் நடக்கிறது. ஸ்ரீரங்கம் பெரிய கோயில் 50வது பட்டம் ரங்க நாராயண சுவாமி ஜீயர் சுவாமிகள் தலைமை வகிக்கிறார். முன்னதாக யாக சாலை பூஜைகள் இன்று மாலை 4 மணிக்கு துவங்கி, 29ம் தேதி காலை வரை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை(ஜூன் 28) இரவு 7 மணிக்கு இன்னிசை கலை நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. கும்பாபிஷேக நாளில் காலை 7 மணி முதல் மதியம் 2 வரை அன்னதானம், காலை 10 மணிக்கு தெம்மாங்கு கிராமிய கலை நிகழ்ச்சி, 11 மணிக்கு கும்பாபிஷேக மலர் வெளியிடுதல், பகல் 12 மணிக்கு கோமாதா பூஜை, சுமங்கலி பூஜையும், மாலை 4 மணிக்கு திருக்கல்யாண வைபவம், மாலை 5.30 மணிக்கு வாணவேடிக்கை, சென்டை மேள தாளத்துடன் சுவாமிகள் மின் ரதத்தில் நகர் வலம் நடக்கிறது. ஏற்பாட்டினை கோயில் நடைமுறை நிர்வாகி மற்றும் எரியோடு- குரும்பபட்டி 18 பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.