பெண்களுக்கு திருமணம் அமையாமல் வயது ஏறிக் கொண்டே சென்றால் பெற்றோர் படும் வேதனை சொல்லி மாளாது. இவர்களுக்கு கைகொடுக்க திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் காத்திருக்கின்றனர். கல்யாண வெங்கடேசரை தரிசித்தால் மாலை சூடும் வேளை தேடி வரும். ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. மகாவிஷ்ணு குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். உலகத்தை படைக்க விரும்பி தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார். அவருக்கு படைக்கும் ஆற்றலை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் கோயில் ஒன்றை அமைத்தார். இங்கு ‘திருவுந்தி பெருமாள்’ என்னும் திருநாமத்துடன் மகாவிஷ்ணு இருக்கிறார். ‘உந்தி’ என்றால் ‘வயிறு’. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்த பிரம்மா தன் பிறப்புக்கு காரணமான உறுப்பின் பெயரையே சுவாமிக்கு சூட்டினார். புராண காலத்தில் ‘சதுர்முகன்புரி’ (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) எனப்பட்டது. ஒரு சமயத்தில் சாபத்தின் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுபட திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபடவே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு விமோசனம் கிடைத்தது. நாரதர் தங்கிய இடம் என்பதால் சதுர்முகன்புரிக்கு ‘நாரதர் பூண்டி’ எனப் பெயர் வந்தது. பிற்காலத்தில் ‘நார்த்தாம் பூண்டி’ என்றானது. 12ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவராயரால் கோயில் கட்டப்பட்டது. 16ம் நுாற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோபுரம், மண்டபம், குளங்கள் அழிக்கப்பட்டன. மீண்டும் புதிதாக கோயில் கட்டப்பட்டு கல்யாண வெங்கடேசப் பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. பத்மாவதி தாயார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. திருமணத்தடை அகல பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி மட்டைத் தேங்காய் வைத்து 27 முறை சன்னதியை சுற்றி வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதியாக தரிசித்து நெய்தீபம் ஏற்றுகின்றனர். எப்படி செல்வது: திருவண்ணாமலை – வேலுார் சாலையில் பிரியும் நாயுடு மங்கலம் கூட்டு ரோட்டில் இருந்து 5கி.மீ., விசேஷ நாட்கள்: புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி