குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி சுவாமி விக்ரகங்கள் அக்.3ல் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2021 01:09
மார்த்தாண்டம்: நவராத்திரி பூஜைக்காக குமரி மாவட்டசுவாமி விக்ரகங்கள் அக்.3ம் தேதி கடந்த ஆண்டைப்போல் எளிய முறையில் பவனியாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுகிறது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி பூஜைக்காக மன்னர் ஆட்சி காலம் முதல் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலும், பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி நெற்றிப்பட்டம் அணிந்த அலங்கார யானை மீதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு வந்தது. குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் நள்ளிரவு சுவாமி விக்ரகங்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும். இதேபோல் பூஜைக்காக பொருட்களை கொடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை பாதிப்பைத்தொடர்ந்து விக்ரகங்கள் 4 பேர் தூக்கி செல்லும் விதத்தில் சிறிய பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆண்டும் முன்னுதித்த நங்கை, முருகன், சரஸ்வதி தேவி விக்ரகங்கள் சிறிய பல்ல க்கில் வைத்து கொண்டு செல்லப்படுகிறது . இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் யானை இல்லை . வழிநெடுக சுவாமிகள் பூஜை ஏற்பதில்லை. 20 பேர் மட்டுமேபவனியில் பங்கேற்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணியவேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உட்பட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் உறுதியாக கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 3ம் தேதி புறப்பட்டு அன்று குழித்துறை மகாதேவர் கோயிலிலும், 4ம் தேதி நெய்யாற்றின்கரை ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும் யாத்திரை குழுவினர் தங்கி 5ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகின்றனர். நவராத்திரி பூஜைகளுக்கு பின் அக்.17ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விக்ரகங்கள் திரும்பி நெய்யாற்றின்கரை , குழித்துறை வழியாக பத்மநாபபுரம் சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து கேரள தேவசம்போர்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.