பதிவு செய்த நாள்
24
செப்
2021
05:09
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். முன்னோர்கள் 15 நாட்கள் நம்முடன் தங்குகின்ற காலமே மகாளய பட்சம். புரட்டாசி தேய்பிறை பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படும். இந்த காலத்தில் முன்னோர்கள் எமதர்மனின் அனுமதியுடன் நம்மைக் காண பூலோகத்திற்கு வருகின்றனர். அவர்களை வரவேற்பது நம் கடமை. இந்த நாட்களில் புனித தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருவெண்காடு, கோடிக்கரை, வேதாரண்யம், திருப்புவனம், கன்னியாகுமரி, சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோகர்ணம், பவானி கூடுதுறை, திருச்சி ஸ்ரீரங்கம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதிலபதி, பூம்புகார், உடுமலை திருமூர்த்திமலை, திருவள்ளூர், சென்னை மயிலாப்பூர் கோயில் குளக்கரைகளில் தர்ப்பணம் செய்வர். அரிசி, காய்கறி, பழங்கள், புத்தாடை படைத்து வழிபட்டு ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். இதனால் தடைப்பட்ட திருமணம், வேலையின்மை, நோய்கள், மன வருத்தம் விலகி சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கும். பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். முன்னோர் ஆசியால் செல்வம் பெருகும்.