பதிவு செய்த நாள்
23
செப்
2021
06:09
மாதவப்பெருமாள் மணக்கோலத்தில் அருள்புரியும் தலம் சென்னை மயிலாப்பூர். புரட்டாசி சனியன்று இவரை வழிபட்டால் தடைகள் நீ்ங்கி மணவாழ்வு சிறப்பாக அமையும். குழந்தைப் பேறுக்கு குறைவிருக்காது.
மகாவிஷ்ணுவின் சாந்த குணத்தை சோதிக்க எண்ணிய பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைத்தார். அதைக் கண்ட மகாலட்சுமி கோபத்துடன் விஷ்ணுவின் மார்பை விட்டு நீங்கினாள். தன் தவறுக்கு பிராயச்சித்தம் தேட விரும்பிய பிருகு, தன் மகளாக மகாலட்சுமி அவதரிக்க வேண்டும் என இத்தலத்தில் தவத்தில் ஈடுபட்டார். அவரது பக்திக்கு இரங்கிய மகாலட்சுமி, இங்குள்ள குளத்தில் குழந்தையாக அவதரித்தாள். ‘அமிர்தவல்லி’ எனப் பெயரிட்டு வளர்த்தார் பிருகு. திருமண வயதை அடைந்த போது மகாவிஷ்ணு மணமகனாக வந்து அமிர்தவல்லியை ஏற்றார். அவரே இங்கு மாதவப்பெருமாளாக கோயில் கொண்டார். தாமரை போல அழகான முகத்துடன் இருப்பதால் உற்ஸவர் ‘அரவிந்த மாதவன்’ எனப்படுகிறார். ‘அரவிந்தம்’ என்றால் ‘தாமரை’.
நாரத மகரிஷியிடம், ‘பூலோகத்தில் தோஷம் இல்லாத தலம் எது’ என வியாசர் கேட்ட போது இத்தலத்தையே குறிப்பிட்டார். கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அமிர்தவல்லித்தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ, பால் சேர்ந்த கலவையை நைவேத்யம் செய்கின்றனர்.
இங்கு உள்ள ‘மணிகைரவம்’ என்னும் கிணற்றில் பூத்த அல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். ஐப்பசி சதயம் நட்சத்திரத்தை ஒட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கும். பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரும் மகாவிஷ்ணுவைச் சந்தித்த நிகழ்வின் அடிப்படையில் ‘திருக்கோவிலுார் வைபவம்’ இங்கு நடக்கிறது.
மகான் ராமானுஜர் கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரம் கோயிலுக்குச் சென்ற போது, அங்குள்ள உற்ஸவர் சிலையை டில்லி பாதுஷாவின் மகள் எடுத்துச் சென்றதைக் கேள்விப்பட்டார். உடனடியாக டில்லிக்குச் சென்று அச்சிலையை மீட்டார். இதனடிப்படையில் ‘செல்வப்பிள்ளை’ என்னும் சன்னதி இங்குள்ளது. பூவராகப்பெருமாள், ஆண்டாள், ராமர், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது:
* கோயம்பேட்டில் இருந்து 12 கி.மீ.,
* எக்மோரில் இருந்து 5 கி.மீ.,