அருப்புக்கோட்டை : மானாமதுரை வைகை ஆற்றில் பிற்கால பாண்டியர்களின் துண்டு கல்வெட்டுகளை கண்டெடுத்த அழகப்பா பல்கலை ஆய்வு மாணவர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைகண்ணன், மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லுாரி மாணவர் துவாரகன் ஆகியோர் இவற்றை ஆய்வு செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஒரே இடத்தில் 2 கல்வெட்டு துண்டுகள் கிடைத்துள்ளது. இது பிற்கால பாண்டியர்களின் காலத்தை சேர்ந்தது. இதன் காலம் 12 ம் நுாற்றாண்டு. அரசரின் பெயர் சுந்தரபாண்டியன் என்று மட்டும் உள்ளது. விரிவான விபரங்கள் காண முடியவில்லை. அரசரின் 5 ம் ஆண்டு கால ஆட்சியில் பிரம்மதேயம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கப்பட்டதை குறிக்கும். பூதிக்குளம், வேளார்குறிச்சி என்ற 2 ஊர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளது. இங்கு அமைந்திருந்த கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க தானம் அளிக்கப்பட்டதை கல்வெட்டுகளில் பொறித்திருக்கிறார்கள். சிறப்பான வழிபாட்டில் இருந்த கோயில் பின்னாளில் சிதைந்து போயிருக்கலாம். இதுபோன்ற சிறப்பான கோயில்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது. இதுபோன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும், என்றனர்.