பதிவு செய்த நாள்
01
அக்
2021
04:10
சென்னை: கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில் களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும். அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும். திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.