பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
மேட்டுப்பாளையம்: கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க, மஹாளய அமாவாசையான இன்று, அரங்கநாதர் கோயில், வனபத்ரகாளியம்மன் ஆகிய கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளன. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாள் ஆகும். இந்த நாட்களில், ஆற்றின் கரையோரம், முன்னோர்களுக்கு பிடித்தமான பலகாரங்களையும், துணிகளையும் படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதன் பின்பு, கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு செல்வர்.
இந்தாண்டு இன்று மகாளய அமாவாசை. ஆனால் தமிழக அரசு நோய்த்தொற்று பரவுதலை தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய கோவில்களில் பக்தர்கள், வழிபாட்டிற்கு அனுமதி மறுத்து அறிவித்துள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகிய இரு கோவில்களும், இன்று அடைக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் வழிபாட்டிற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட உள்ளது. அதேபோன்று, மேட்டுப்பாளையம் நகராட்சி, கோவிந்தபிள்ளை மயானத்தில் உள்ள நந்தவனத்தில், இன்று மகாளய அமாவாசையை நாளில், எவ்வித திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாது என, நிர்வாகம் அறிவித்துள்ளது.