பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்ககூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மகாளய அமாவாசையையொட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்பணம் செய்யவும் அனுமதி இல்லை என, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவிலின் நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்வேறு பகுதியில் இருந்துள்ள நிலையில், கோவில் கதவு அடைக்கப்பட்டுள்ளதால், பக்தர் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. எனவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் சதீஷ், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், பெருர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை திறக்கப்பட்டு, கொடிக்கம்பம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். அதேபோல், மாலை, 4:00 மணிக்கு, கோவில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.