பதிவு செய்த நாள்
09
அக்
2021
02:10
தளவாய்புரம்,: சேத்துார் அடுத்த சொக்கநாதன்புத்துார் மாரியம்மன் திருக்கோயிலில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சொக்கநாதன்புத்துாரில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா திருவிழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நித்தியானந்த விநாயகர், ஸ்ரீ வடகாசி அம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். ஒவ்வொரு நாளும் வில்லுப்பாட்டு, தெம்மாங்கு இசை கச்சேரி, பரதநாட்டியம், குத்து விளக்கு பூஜை, தண்டியல் சப்பரம், சிலம்பாட்ட குழு விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், ஏ .கே. ஆர் பிரிக்ஸ் காமராஜ், ராஜ் பிரியம் மற்றும் ஊர் தலைவர்கள் விழா குழுவினர் பொதுமக்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் பின் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.