பாபநாசம்: திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான நல்லூர் கிரிசுந்தரி உடனரும் கல்யாணசுந்தரேசுவரர் ஆலயத்தில் அமர்நீதிநாயனார் துலாபாரம் பூஜைகள் திருவாடுதுறை ஆதின கர்த்தர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. இத்தலம் அப்பர்பெருமானுக்கு சிவன் திருவடிதீட்சை தந்த தலம். திருமண பேறு நல்கும் தலம். இங்கு வாழ்ந்த அமர்நீதிநாயனார் சிவனடியாருக்கு ஆடை (கோவனம்)அளித்து வந்தார். இவரை சோதிக்க சிவன் சிவனடியாராக வந்து அமர்நீதிநாயனாரிடம் கோவணத்தை கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னார். சிவப்பெருமான் கொடுத்த ஆடை காணாமல் போனது. இதற்கு ஈடாக வேறு ஆடைகளை தராசு தட்டில் வைத்தும் தராசு சமமாகவில்லை. அமர்நீதி நாயனார் தனது பொன் பொருள், ஆடைகள் அனைத்தும் வைத்தும் தட்டு சமமாகவில்லை. உடனே இறைவனை வேண்டி கொண்டு அமர்நீதி நாயனாரும் அவரது மனைவியும் தராசு தட்டில் அமர்ந்தனர். தட்டு சமமானது. இறைவன் அமர்நீதி நாயனாருக்கு காட்சி தந்து முக்தியளித்தார். இந்த வரலாற்றை சைவ நெறிதமிழ் வள்ளலார் முனைவர் திருசிற்றம்பலம் படித்த பிறகு சிவன் பார்வதி நாயனாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் தீபராதனை பூஜையும் நடந்தது. அமர்நீதி நாயனார் மடம் நிர்வாகிகள் கோவில் சிப்பந்திகளுக்கு ஆடைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சாமிநாதன் மற்றும் நடராஜன் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.