ஐப்பசி முதல் தீர்த்தவாரி: பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2021 06:10
தேவகோட்டை: ஐப்பசி மாதம் முதல் நாளும் , கடைசி நாளும் தேவகோட்டை, மற்றும் நயினார்வயல் உட்பட வெளியூரில் உள்ள கோயில்களில் சுவாமிகள் தேவகோட்டை மணிமுத்தாறில் ஒன்றாக ஒரே நேரத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது மரபு வழக்கம். இந்த வைபவம் இப்பகுதியில் பிரபலமானது. ஆற்றில் நடக்கும் அபிஷேகம் பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்பர். இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டு சுவாமிகள் மணிமுத்தாறு பகுதிக்கு செல்ல முடியாததால் அந்தந்த கோயில்களின் அருகே உள்ள ஊரணிகளில் நடந்தது. இன்று பகலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் , கைலாசநாதர் , சிலம்பணி சிதம்பர விநாயகர் , கைலாசவிநாயகர் சுவாமிகளின் அஸ்திரத்தேவர்களுக்கும், சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. கோதண்டராமர் ஸ்வாமி, கிருஷ்ணர் சுவாமிகளின் சக்கரத்தாழ்வார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடந்தன. அகத்தீஸ்வரர் நயினார்வயலில் தீர்த்தம் கொடுத்தார். கோயில்களில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.