உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. கொடியேற்றம் துவங்கியதும் பக்தர்கள் காப்பு கட்டி ஊர் ஊராகச்சென்று காணிக்கை பிரித்து 10ம் திருவிழா அன்று கோயிலுக்கு தாங்கள் நேர்த்தி கடனாக அணிந்த வேஷத்துடன் அம்மனை தரிசித்து காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இந்தஆண்டு 10ம் திருவிழா கடந்த15 ம் தேதி மற்றும் 16, 17ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியிறக்கப்பட்டு காப்பு களைந்தபிறகும் ஏராளமான பக்தர்கள் விரதத்தை முடிக்காமல் நேற்று அதிகாலை முதலே கோயிலுக்கு வருகை தந்தனர். பலர் தங்களது வேடங்களைஅணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினர். மேலும் தீச்சட்டியும் எடுத்து வந்தனர். இதனால் கடற்கரை மற்றும் கோயிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.