பொது அறிவு போட்டியில் வென்றால் விமானத்தில் அயோத்திக்கு செல்லலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2021 03:10
போபால்: மத்திய பிரதேசத்தில் ராமாயணம் தொடர்பான பொது அறிவு போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுவோருக்கு, விமானத்தில் இலவசமாக அயோத்தி சென்று வரும் வாய்ப்பை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு, மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனைகளை மேலோங்கச் செய்யும் முயற்சிகளிலும் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஹிந்து மதத்தின் புனித இதிகாசமான ராமாயணம் தொடர்பாக பொது அறிவு போட்டியை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் ஆன்மிகத் துறை அமைச்சர் உஷா தாக்குர் கூறியதாவது:ராமாயணம் தொடர்பாக பொது அறிவு கேள்வி பதில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வெற்றி பெறுவோருக்கு பரிசாக, உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு இலவசமாக விமானத்தில் சென்று வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் திறக்கப்பட்டதும் அங்கு சென்று தரிசிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பொது அறிவு போட்டி நடக்கும் தேதி குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.