பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
விவேகானந்தர் வேகமாக நடன அரங்கிற்குச் சென்றார். அந்த நாட்டியக்காரியிடம், தாயே! உன்முன்னால் இப்போது நான் குற்றவாளியாக நிற்கிறேன். இங்கு வராமல் இருந்தது என் தவறு. உன்பாடல் என் அறிவுக்கண்களை விழிக்கச் செய்து விட்டது, என்றார். இந்த சம்பவம் மனதை நெகிழ வைக்க, கேத்ரியில் இருந்து புறப்பட்டார் சுவாமிஜி, அவரது சிகாகோ பயணம் துவங்கியது. மும்பை ரயிலில் அவர் கிளம்பினார். அங்கிருந்து கப்பலில் போக வேண்டும். ரயிலில் ஏறியதும் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு ரயில்வே ஊழியர் சுவாமிஜியிடம் பேசிக்கொண்டே வந்தார். ஓரிடத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். அவர் ரயில்வே ஊழியரை கீழே இறங்கச் சொன்னார். ஊழியர்களுக்கு டிக்கட் தேவையில்லை என சொன்னதை பரிசோதகர் ஏற்கவில்லை. நீ கீழே இறங்கு என்றார் தனக்கு தெரிந்த அரைகுறை இந்தியில். சுவாமிஜிக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் தும் (நீ) என சொன்னது தவறு. ஆப் (நீங்கள்) என சொல்லியிருக்க வேண்டும் என்றார்.
பரிசோதகர் இப்போது ஆங்கிலத்தில், திஸ் மேன் என ஆரம்பித்தார். சுவாமிஜி ஆங்கிலத்தில், இப்போதும நீங்கள் தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு இந்தி மட்டுமல்ல, உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் தெரியவில்லை. திஸ் ஜென்டில்மேன் என சொல்லியிருக்க வேண்டும் என்றார். பரிசோதகர் பதில் பேசாமல் போய் விட்டார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை சுயமரியாதைக் குறைவாக நடத்த சுவாமிஜி அனுமதிக்கவே மாட்டார். ஒருவழியாக மும்பை வந்தாயிற்று. பெனின்சுலார் என்பது சுவாமிஜி செல்லவிருந்த கப்பலின் பெயர். பல சுதேசிமன்னர்களும், தமிழக மக்களும் வழங்கிய நிதி சுவாமிஜிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு முதல்வகுப்பு டிக்கட் எடுத்துக் கொடுக்கப்பட்டது. அவருக்கு விலைஉயர்ந்த ஆடைகளும் வாங்கிக் கொடுத்தனர். ஆரஞ்ச் கலர் பட்டு ஜிப்பா, தலைப்பாகை சகிதமாக சுவாமிஜி ஜொலித்தார். அமெரிக்கர்கள் நம்மை மதிக்க இதை நீங்கள் உடுத்தியே ஆக வேண்டும் என சீடர்கள் கட்டாயப்படுத்தினர். வேறு வழியின்றி அவற்றை உடுத்திக் கொண்டார் சுவாமிஜி.
1893, மே31 கப்பல் புறப்பட்டது, பத்தாயிரம் மைல் கடல் பயணம் ! சுவாமிஜி எல்லோரிடமும் மிக நன்றாக பழகி விட்டார். கப்பல் கேப்டன் அவருக்கு கப்பல் இயங்கும் முறை பற்றி கூறுமளவுக்கு நெருங்கி விட்டார். கப்பலில் பயணித்த ஆங்கிலேயர்களில் பழக்க வழக்கங்களையும் அவர் பார்த்துக் கொண்டார். இது அமெரிக்காவில் தனக்கு உதவும் என அவர் நினைத்தார். கப்பல் இலங்கை, சிங்கப்பூர், வழியாக சீனா வந்தடைந்தது. அங்கேயுள்ள கோயில் ஒன்றைப் பார்வையிட சுவாமிஜி விரும்பினார். ஆனால் அந்த ஆலயத்திற்கள் வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அறிந்தார். ஆனால், அதுபற்றி கவலைப்படாமல் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது ஆலய பாதுகாவலர்கள் பெரிய தடிகளுடன் சுவாமிஜியை நோக்கி ஓடி வந்தனர். சுவாமிஜி கலங்கவில்லை. சுவாமிஜியுடன் சென்று கொண்டிருந்த சகபயணிகள் சிலரும், சில மொழி பெயர்ப்பாளர்களும் அவரை தனியாக விட்டுவிட்டு ஓட எத்தனித்தனர். சுவாமிஜி, ஒரு மொழி பெயர்ப்பாளரை கையை விடாமல் பிடித்துக் கொண்டு, நான் ஒரு யோகி என்பதற்கு சீனமொழியில் மொழி பெயர்ப்பு வாக்கியத்தைச் சொல்லிவிட்டு ஓடு என்றார். அவரும் சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.
சுவாமிஜி அங்கு நின்றபடியே அந்த சீன மொழி பெயர்ப்பு வாக்கியத்தை ஆவேசமாகக் கத்தினார். தடியுடன் வந்தவர்கள் அவற்றைக் கீழே போட்டுவிட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கினர். சுவாமிஜி! இந்தியாவில் யோகா என்பது பிறரை வசியப்படுத்தும் கலையாமே ! நீங்கள் பிறரை வசியப்படுத்தும் தாயத்து வைத்திருப்பீர்களாமே ! அதைக் கொடுங்கள் என்றனர். சுவாமிஜி ஒரு பேப்பரில் ஓம் என்று எழுதி, திருவிளக்கு சீட்டுப் போல் சுருட்டி அவர்கள் கையில் கொடுத்து, இது தான் தாயத்து என்றார். அவர்கள் அதை பயபக்தியுடன் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டனர். ஒரு வழியாக கப்பல் அமெரிக்காவை அடைந்தது. வான்கூவர் துறைமுகத்தில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இங்கிருந்து கனடா வழியாக சிகாகோவுக்கு ரயில் பயணம். சிகாகோவை அடைந்ததும் அங்கே ரயில்வே ஊழியர்கள் கேட்ட பணம் தான் தூக்கி வாரிப்பட்டது. இவ்வளவு விலைவாசியுள்ள இந்தி நகரத்தில் நான் கொண்டு வந்துள்ள பணம் எத்தனை நாளைக்கு வரும் என தெரியவில்லையே என அவர் கணக்கு போட துவங்கி விட்டார். ஒரு ஓட்டலில் அறையெடுத்தார். சிகாகோவில் உலகப் பொருட்காட்சி ஒன்று நட்நது கொண்டிருந்தது. அந்த கண்காட்சி அரங்கில் தான் சர்வமத மகாசபை கூட்டம் நடக்க இருந்தது. அந்த பொருட்காட்சியை சுற்றிப்பார்த்த சுவாமிஜி அமெரிக்காவின் விஞ்ஞான வளர்ச்சியை அறிந்து கொண்டார். இந்த விஞ்ஞானத்தில் முன்னால், மக்களின் அஞ்ஞானம் குறித்து தான் பேசப்போகும் ஆன்மிகம் வெல்லுமா என்ற சந்தேகம் அவருக்குள் ஏற்பட்டது.
அடிக்கடி அங்கு சென்ற சுவாமிஜி சிலருடன் பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அங்கே ஒரு மராட்டிய பிராமணர் ஒருவர் ஸ்டால் ஒன்றை அமைந்திருந்தார். அமெரிக்காவில் நிறைய உள்ளூர் பத்திரிகைகள் உண்டு. அவற்றின் நிருபர்களுடன் கடைக்காரருக்கு பழக்கும் உண்டு. அங்கே நம் நாட்டு சமஸ்தான அதிபதி ஒருவர் வந்திருந்தார். அவர் அந்த கடைக்காரரைக் கண்டு கொள்ளவில்லை. உடனே கடைக்காரர் சிகாகோ நகர நிருபர்களை அழைத்து, சமஸ்தானதிபதியை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்ல, அங்குள்ள பத்திரிகைகள் அவரைப் பற்றி எக்குத்தப்பாக செய்தி வெளியிட்டு விட்டன. அதே போல், அந்த கடைக்காரர் வேடிக்கையாக ஒரு முறை, விவேகானந்தரைப் பற்றி நிருபர்களிடம், இந்தியாவில் இருந்து ஒரு ஞானி வந்துள்ளார் எனச்சொல்ல, அந்த பத்திரிகைகள் விவேகானந்தரே சொன்னது போல சில கருத்துக்களை தன்னிச்சையாக வெளியிட்டு விட்டன. இப்படி பரபரப்பை ஏற்படுத்துவது அமெரிக்க பத்திரிகைளுக்கு வாடிக்கை தான் ! பின்னர் நிருபர்களே அவரைத் தேடி வரத்துவங்க அவர் பிரபலமாகிக் கொண்டிருந்த வேளையில், ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது. சுவாமிஜி ஜூலை மத்தியில் அமெரிக்கா வந்து விட்டார். அப்போதே மகாசபை மாநாடு நடப்பதாக இருந்தது. அது திடீரென செப்டம்பர் மத்திக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். அது வரை இங்கே தங்குவதற்குரிய பணவசதி நம்மிடம் இல்லையே ! இருப்பதை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு திரும்ப வேண்டியது தானா ? அந்த யோகியின் மனதில் போராட்டம் !