பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
ஹாசன் : ஹாசன் ஹாசனாம்பா கோவில், நாளை திறக்கப்படவுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும், ஹாசன் ஹாசனாம்பா தேவி கோவில், நாளை திறக்கப்படுகிறது. நவ., 6ல் மூடப்படுகிறது.கொரோனா மூன்றாம் அலை பீதியால், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை எதிர்த்து அப்பகுதியினர் கோவில் முன் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கலால் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கோபாலய்யா, ஹாசன் அரசினர் விருந்தினர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ளது. எனவே, அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 6 ம் தேதி தவிர, மற்ற நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் செய்ய வருவோர், குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.