பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
அயோத்தி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் நேற்று வழிபாடு செய்தார்.
உ.பி.,யில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி.,யில் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கிவிட்டார். இதன் ஒரு பகுதியாக, உ.பி.,யின் அயோத்தி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் ராமஜென்ம பூமிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வந்தார். அங்குள்ள ஹனுமன் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ராமரை தரிசிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அமைந்தது. இதுபோல அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு அமைய வேண்டும். ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக ஒழிந்து, நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்தனை செய்தேன். மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தை டில்லி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் ஆண்டுதோறும் 77 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். வைஷ்ணவி தேவி கோவில், ராமேஸ்வரம், துவாரகாபுரி, ஹரித்வார், ரிஷிகேஷ், மதுரா, பிருந்தாவனம் ஆகிய புனித தலங்களுக்கு மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர். ரயில் மற்றும் தங்கும் செலவுகளை அரசு ஏற்கிறது. இந்த திட்டத்தில் ராம ஜென்ம பூமியும் இணைக்கப்படும். ராமஜென்ம பூமி கட்டுமான பணிக்கு நன்கொடை அளித்துள்ளேன். நன்கொடை தொகை குறித்து வெளியே சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.