பதிவு செய்த நாள்
28
அக்
2021
05:10
உடுமலை: உடுமலை பூமாலை வீதியில், பழமை வாய்ந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில், விநாயகர், ராமலிங்க ஈசுவரர், முருகன், துர்க்கை, நவகிரக நாயகர்கள் சன்னிதிகள் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழாவுக்கான சிறப்பு பூஜைகள், கடந்த 25ம் தேதி துவங்கியது.அன்று, மாலை, திருவிளக்கு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, முளையிடுதல், காப்பு கட்டுதல் உட்பட நிகழ்ச்சிகளும், இரவு வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு நாட்கள், மூன்று கால வேள்வி பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, 6:30 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, காப்பணிதல் நிகழ்ச்சிக்கு பிறகு, நான்காம் கால வேள்வி துவங்கியது.காலை, 9:00 மணிக்கு, திருக்குடங்கள் புறப்பட்டு, 9:30 மணிக்கு, விமானம் மற்றும் மூல மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபாடு செய்தனர். பின்னர் புனித நீர் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து, பதின்மங்கலகாட்சி, பெருந்திருமஞ்சனமும், கன்னியர் எழுவர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. மதியம், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று முதல் வரும் நவ., 7 ம் தேதி வரை 12 நாட்கள் மண்டல பூஜை, தினமும் காலை, 10.00 மணியளவில் நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.