பதிவு செய்த நாள்
29
அக்
2021
10:10
சென்னை :அறங்காவலர்கள் இல்லாமல், காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு: சட்டசபை அறிவிப்புகளை தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் இரண்டு சுற்றறிக்கைகளை பிறப்பித்தார். கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் நிதியை பயன்படுத்தி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையும், அறங்காவலர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தடை: கடந்த 10 ஆண்டுகளாக, கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில், டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில் ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர்.அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மற்றொரு மனுவும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன், சாய் தீபக், மூத்த வழக்கறிஞர் பிரதீப் சஞ்செட்டி ஆஜராகினர். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கோவில் நகைகளை உருக்கவில்லை; காணிக்கையாக வந்ததை உருக்குகிறோம். 10 ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நகைகளை உருக்கி டிபாசிட் செய்ததன் வாயிலாக, 11.5 கோடி ரூபாய் வட்டி கிடைத்துள்ளது. அந்தப் பணம், கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, நகை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. அது முடிய, மூன்று வாரங்களாகும். நடவடிக்கைகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.
தள்ளிவைப்பு: இதையடுத்து, கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர்கள் இல்லாமல், நகைளை உருக்குவதற்கான முடிவை அரசு எடுக்கக் கூடாது என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. உடனே, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், கணக்கெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறோம். அறங்காவலர்கள் நியமனத்துக்கு பின், நகைகளை உருக்குகிறோம், என்றார்.அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், அட்வகேட் ஜெனரல் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், கோவில் நலனுக்கு பாதகம் ஏற்படும் என மனுதாரர்கள் கருத வேண்டியதில்லை. காணிக்கை நகைகள் மற்றும் இதர பொருட்கள் கணக்கெடுக்கும் பணியை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் மேற்கொள்ளலாம். ஆனால், அறங்காவலர்கள் இன்றி, நகைகளை உருக்குவது தொடர்பான முடிவை எடுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.மனுக்களுக்கு, நான்கு வாரங்களில் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 15க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.