ஐதராபாத்-ஹிந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என, வி.எச்.பி., எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரியுள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாதில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வ தேச செயல் தலைவர் அலோக் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஹிந்து கோவில்கள் மற்றும் மத ரீதியிலான நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும் என, மத்திய அரசிடம் கோரியுள்ளோம். அவற்றை ஹிந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துஉள்ளோம். பல்வேறு மாநிலங்களில் அச்சம் விளைவித்தும், ஆசை வார்த்தை கூறியும் மத மாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக அளவில் மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை போல, தெலுங்கானா அரசும் மத மாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.தேசிய அளவில் இச்சட்டத்தை நிறைவேற்றும்படி மத்திய அரசிடமும் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.