பதிவு செய்த நாள்
02
நவ
2021
02:11
தீபாவளிப் பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் சந்தித்த பெருந்தொற்று பாதிப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற இருளை நீக்கும் தீப ஒளியாக இவ்வாண்டு அமைய கடவுளை பிரார்த்திப்போம்.
மனிதன் தினமும் ஐம்பெரும் வேள்வி எனப்படும் பஞ்ச யக்ஞங்களை செய்ய வேண்டும். அவை தெய்வ வழிபாடு, முனிவர் வழிபாடு, சாஸ்திரங்களை வகுத்த குரு வழிபாடு, இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு.வீட்டில், கோயிலில் கடவுளை வழிபடுதல் தெய்வ வழிபாடு. மகான்கள், முனிவர்களை வழிபடுதல் முனிவர் வழிபாடு. சாஸ்திரங்கள் வகுத்த நெறியில் வாழ்தல், மக்களுக்கு உதவுதல் ஆசிரியர் வழிபாடு, மரம் செடி கொடிகளை வளர்த்தல் இயற்கை வழிபாடு, காக்கைக்கு உணவு வைத்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவை முன்னோர் வழிபாடு.
இவை அனைத்துமே நம் வாழ்வோடு ஒன்றி விட்டவைதான். இதை உணர்ந்து செய்துவந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.தீபாவளியுடன் தொடர்புதீபாவளி கொண்டாடுவதில் இந்த வேள்விகள் எப்படி சம்பந்தப்படுகின்றன என்பதை பார்ப்போம்.பலகாரம், பட்சணங்களை கடவுளுக்கு படைத்து வழிபாடு செய்தல் தெய்வ வழிபாடு. அந்தந்த பகுதிகளில் உள்ள மகான்களையும் பெரியவர்களையும் வணங்கி ஆசி பெறுதல் முனிவர் வழிபாடு. மந்திரங்கள், ஸ்லோகங்கள், பதிகம் பாசுரங்களை ஓதுதல், மக்களோடு கூடி வாழ்த்துவது குரு வழிபாடு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியன வளம்பெற வேண்டுவது இயற்கை வழிபாடு. அடுத்த முன்னோர் வழிபாடுதான் தீபாவளிப் பண்டிகையின் முக்கிய நிகழ்வு. மகாளய பட்சத்தின்போது பூமிக்கு வந்து தம் சந்ததியினரைக் கண்டும், அவர்கள் செய்த தர்ப்பணம் திதி முதலியவற்றால் திருப்தியும் கொண்ட முன்னோர்கள்
மீண்டும் தமது இருப்பிடம் திரும்பும் நாள் தான் தீபாவளி. அதனால்தான் அன்று எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிகிறோம். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து நம்முன்னோர்கள் செல்லும் வழிக்கு ஒளி காட்டுகிறோம். அவர்கள் ஆசியுடன் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதை உணர்த்தும் முகமாக குடும்பத்தினருடனும் சொந்த பந்தங்களுடனும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோம்.
மனித வாழ்வுடன் எல்லாவிதத்திலும் தொடர்புடையது தீபாவளி.எனவே தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஐம்பெரும் வேள்விகள் செய்த புண்ணியத்துடன் இன்பமாய் வாழ்வோம் என தினமலர் வாசகர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.- ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார்ஸ்ரீமஹாசதாசிவ பீடம்,சிவபுரம் கல்வி அறக்கட்டளை,மயிலாடுதுறை.